கோவில் பாதுகாப்பு படையை கலைக்க வேண்டும் முன்னாள் ஐ. ஜி பேட்டி

72பார்த்தது
முன்னாள் ஐ. ஜி. பொன். மாணிக்கவேல் நேற்று மாலை சேலம் சுகவனேசுவரர் கோவிலுக்கு வந்தார். அங்கு அவர் சாமி தரிசனம் செய்து விட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பொன். மாணிக்கவேல் கூறியதாவது: -
போலீசாரையும், முன்னாள் ராணுவத்தினரையும் இணைத்து கோவில் பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டது. ஆனால் 1, 022 உண்டியல் திருட்டுகள், 248 கோவில்களில் 500-க்கும் மேற்பட்ட விக்ரகங்கள் திருட்டுகள் போய் உள்ளன. மேலும் 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை கோவில் பாதுகாப்பு படையினருக்கு ரூ. 172 கோடி செலவு செய்தும் எந்த பலனும் இல்லை. ஆகையால் கோவில் பாதுகாப்பு படையை கலைக்க வேண்டும்.
அறநிலையத்துறை அமைச்சர் தொடங்கி அதிகாரிகள் வரை அனைவருக்கும் கோவிலுக்கு வரியாக போடப்படும் பணத்தில் இருந்து ஆண்டுக்கு ரூ. 428 கோடி ஊதியமாக வழங்கப்படுகிறது. இது உச்சகட்ட அநியாயம். கோவில் பணம் விரயமாவதை அறநிலையத்துறையினர் மறுக்க முடியாது.
சேலம் மாவட்டம் ஆறகளூரில் உள்ள கோவிலை சென்று பார்த்தேன். அந்த கோவிலின் பழமையை அழித்து நவீனமாக்கப்பட்டுள்ளது. அந்த கோவிலை பாதுகாக்கப்பட்ட புராதன கோவிலாக மாற்றி அறிவிக்க வேண்டும். கோவிலை பாதுகாத்து உழைப்பவர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவதில்லை. அதிகாரத்திற்கு செல்வதில் எனக்கு விருப்பமில்லை. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் சமூக பணிக்கு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி