சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மத்தூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 29). கட்டிட தொழிலாளி. இவர், தனது மனைவி, 2 குழந்தைகளுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். திடீரென்று அவர் மறைத்து கொண்டு வந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடல் மீது ஊற்றிக்கொண்டு மனைவி, குழந்தைகள் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து அவர்கள் தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து போலீசார் சங்கரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கூறும் போது, எனது அண்ணன்களுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தோம். தற்போது எங்களை வீட்டை விட்டு எனது அண்ணன் குடும்பத்தினர் துரத்தி விட்டார்கள். எனவே வாழவழியின்றி 4 பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தோம் என்று கூறினர்.
இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். கலெக்டர் அலுவலகத்தில் கட்டிட தொழிலாளி மனைவி மற்றும் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.