சேலம் சுகவனேசுவரர் கோவிலில் நாய்கள் கடித்து கன்றுகுட்டி பலி

83பார்த்தது
சேலம் டவுனில் பிரசித்தி பெற்ற சுகவனேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தும் பசுக்கள் கோவில் வளாகத்தில் உள்ள கோசாலையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த கோசாலையில் தற்போது 8 மாடுகள் உள்ளன. இதனை கோவில் ஊழியர்கள் பராமரித்து வருகின்றனர். நேற்று காலை கோசாலையில் உள்ள 5 மாத கன்றுக்குட்டி கழுத்து மற்றும் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தது. பின்னர் அவர்கள் இது குறித்து கோவில் அதிகாரிகள் மற்றும் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
அதில், நள்ளிரவு கோசாலைக்குள் தெருநாய்கள் புகுந்து கடித்ததில் கன்றுக்குட்டி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து இறந்துபோன கன்றுக்குட்டி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு முதன்மை டாக்டர் பரணிதரன் தலைமையில் மருத்துவக்குழுவினர் இறந்த கன்றுக்குட்டியை உடற்கூராய்வு செய்தனர்.
இதுகுறித்து டாக்டர் பரணிதரன் கூறும்போது, ‘கன்றுக்குட்டியை 2 அல்லது 3 தெரு நாய்கள் சேர்ந்து கடித்து இருக்கலாம். அப்போது, கழுத்துப்பகுதியில் காயம் ஏற்பட்டு கன்றுக்குட்டி உயிரிழந்துள்ளது’ என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி