ஓமலூர் அருகே உள்ள மானத்தாள் கிராமத்தை சேர்ந்தவர் பாப்பா (70). கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த அவர் அங்குள்ள வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் எனது பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை எழுந்திருக்க மாட்டேன் என கூறி தரையில் படுத்து கொண்டார்.
பின்னர் அவரை போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து போலீசாரிடம் அவர் கூறும் போது, எனக்கு சொந்தமான நிலத்தில் ஆழ்துளை கிணறு மற்றும் மோட்டார் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மின் இணைப்பு கேட்டு பல ஆண்டுகளாக போராடியும் வழங்கப்படவில்லை. இதனால் குடிப்பதற்கு தண்ணீர் எடுப்பதற்காக 3 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று வரவேண்டிய நிலை உள்ளது. மின் இணைப்பு வழங்க கோரி தர்ணாவில் ஈடுபட்டதாக கூறினார். இதையடுத்து கோரிக்கை தொடர்பாக கலெக்டரிடம் பாப்பா மனு கொடுத்தார்.