சேலம் கடைவீதியில் வ.உ.சி. பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு ஓமலூர், காடையாம்பட்டி, வீராணம், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குண்டுமல்லி, சன்னமல்லி, சாமந்தி, அரளி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
சுபமுகூர்த்தம் மற்றும் பண்டிகை நாட்களில் பூக்களின் விலை அதிகரிப்பது வழக்கம். குறிப்பாக குண்டுமல்லி உள்ளிட்ட பூக்கள் வழக்கமான நாட்களை விட மும்மடங்கு விலை உயர்ந்து விற்பனை செய்யப்படும். தற்போது பனிக்காலம் என்பதால் பூக்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து குறைந்துள்ளது.
வழக்கமான நாட்களில் மார்க்கெட்டுக்கு ஒரு டன் வரை குண்டுமல்லி கொண்டு வரப்படும். ஆனால் தற்போது 100 முதல் 150 கிலோ பூக்கள் மட்டுமே விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.2,400-க்கு விற்பனையான குண்டுமல்லி நேற்று (பிப்ரவரி 1) கிடுகிடுவென உயர்ந்து ரூ.3,500 வரை விற்கப்பட்டது.
இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து குண்டுமல்லி பூக்களை வாங்குவதற்கு தயங்கினர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) சுபமுகூர்த்த தினம் என்பதால் வியாபாரிகள் மட்டுமே குறைந்தளவில் குண்டுமல்லியை வாங்கி சென்றனர். ஜாதிமல்லி ரூ.1,600-க்கும், காக்கட்டான் 720-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் மற்ற பூக்களின் விலையும் உயர்ந்தே காணப்பட்டது.