ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும், தை, ஆடி, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை விரதங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதில் தை அமாவாசை மிகவும் சிறப்புவாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்த அமாவாசையில் முன்னோர்களை வழிபடுவது, புனித நீராடுவது, தானங்கள் செய்வது ஆகியவற்றின் மூலம் பல தலைமுறைகளின் பாவங்களில் இருந்து விடுபட முடியும் என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில் தை அமாவாசையை முன்னிட்டு சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் அமாவாசை திதி தர்ப்பணம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதிகாலை முதல் ஏராளமானவர்கள் சுகவனேஸ்வரர் கோவிலில் வரிசையாக நின்று அமாவாசை தர்ப்பணம் செய்ய வந்தனர். அவர்கள் படையல் வைத்து கற்பூரம் காண்பித்து வழிபட்டனர். இதே போல சேலம் மாநகரில் பல்வேறு பகுதிகளில் தை அமாவாசை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.