சேலம் சொர்ணாம்பிகை அம்மனுக்கு 18ஆயிரம் வளையல்கள் சாத்துப்படி

72பார்த்தது
சேலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுகவனேசுவரர் சொர்ணாம்பிகை கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாத கடைசி வெள்ளிக்கிழமை வளையல்கள் சாத்துப்படி வைபவம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று சுகவனேசுவரர் மற்றும் சொர்ணாம்பிகை அம்மனுக்கு 4 கால பூஜைகள் நடைபெற்றன. 

முன்னதாக சுகவனேசுவரர், சொர்ணாம்பிகை அம்மனுக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சொர்ணாம்பிகை அம்மனுக்கு பட்டாடை உடுத்தி தங்க கவசம் சாத்தப்பட்டது. பின்னர் பல்வேறு மலர்களால் அம்மனுக்கு மாலைகள் சாத்தப்பட்டன. பின்னர் சொர்ணாம்பிகை அம்மனுக்கு 18 ஆயிரம் வளையல்கள் சாத்துப்படி வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க லட்சார்ச்சனை நடைபெற்றது. 

அதன் பிறகு மகாதீபாராதனை நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சாத்துப்படி செய்யப்பட்ட 18 ஆயிரம் வளையல்களை கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. அதே போன்று 1 முதல் 10 வயதுள்ள ஆயிரம் பெண் குழந்தைகளுக்கு ஆடை வழங்கப்பட்டது. தை மாத கடைசி வெள்ளிக்கிழமை சொர்ணாம்பிகை அம்மனை வழிபடும் பெண்களுக்கு மாங்கல்யம், குழந்தை பேறு உண்டாகுதல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

தொடர்புடைய செய்தி