சேலம்: அதிமுகவை விஜய் விமர்சிக்காதது ஏன்? எடப்பாடி பழனிசாமி பதில்
சேலம் மாவட்டம் எடப்பாடியில் நடந்த அ. தி. மு. க செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: - தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் பேசிய அதன் கட்சி தலைவர் விஜய், அ. தி. மு. க. வை விமர்சிக்காததற்கு காரணம், 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அ. தி. மு. க. மக்களுக்கு பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியதுதான். எனவேதான் விஜய், அ. தி. மு. க. வை விமர்சிக்கவில்லை. அதற்காக மற்றவர்கள் ஆதங்கப்படுவது ஏன்? ஒவ்வொரு கட்சிக்கும் தனிப்பட்ட குறிக்கோள் இருக்கும். அதனை முன்னிறுத்தியே கட்சி தலைவர்கள் பேசுவார்கள். இதில் மற்றவர்கள் ஆதங்கப்படக்கூடாது. விருதுநகர் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மட்டும் ஊழல் நடைபெறவில்லை. மாறாக அனைத்து துறைகளிலும் பல்வேறு ஊழல்கள் நடைபெற்று வருகிறது. அ. தி. மு. க ஆட்சிக்கு வந்தவுடன் அந்த ஊழல்கள் உரிய முறையில் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக அமைதியாக இருந்த காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் அரசுக்கு எதிராக அறிவித்து வரும் போராட்டங்களும், அறிவிப்புகளும் கூட்டணியில் பிளவு ஏற்பட்டு இருப்பதை காட்டுகிறது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.