
சேலையூர் கிணற்றில் மூதாட்டி உடல் மீட்பு
செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் அருகே கேம்ப் ரோடு, ஸ்ரீராம் நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள திறந்தவெளி கிணற்றில், வயதான பெண் உடல் மிதப்பதாக, சேலையூர் காவல் நிலையத்திற்கு, நேற்று தகவல் வந்தது. தாம்பரம் தீயணைப்பு நிலைய வீரர்களுடன் சென்ற போலீசார், மூதாட்டியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், இறந்தவர் அதே பகுதியை சேர்ந்த ஆவுடையம்மாள், 68, என்பது தெரிய வந்தது. ஆவுடையம்மாளை காணவில்லை என, அவரது மகள் சுதா, சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், நேற்று கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஆவுடையம்மாள், தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என, சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.