செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளர் தினேஷ் பணிபுரிந்து வருகிறார். கடந்த 6-ம் தேதி காவல் நிலையத்தில் பணியில் இருக்கும்போது புகார்தாரர்களிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது பல்வேறு பிரச்சினைகள் சம்பந்தமாக சிலர் புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு வந்திருந்தனர். அப்போது சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளர் தினேஷ் தனது கையில் வைத்திருந்த 2 செல்போன்களில் ஒரு செல்போனை தனது மேஜையில் வைத்துவிட்டு மற்றொரு போனில் வேறொரு நபரிடம் புகார் சம்பந்தமாக பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி புகார் கொடுக்க வந்த ஒரு வாலிபர் உதவி ஆய்வாளர் மேஜையில் வைத்திருந்த செல்போனை நைசாகத் திருடிக் கொண்டு உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுவிட்டார். பின்னர் 20 நிமிடங்கள் கழித்து தான் மேஜையில் வைத்திருந்த மற்றொரு செல்போன் காணாமல் போனதை அறிந்த தினேஷ் காவல் நிலையத்தில் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தார். ஆனால் அவரது செல்போன் கிடைக்கவில்லை.
மேலும் காணாமல் போன செல்போன் எண்ணிற்கு போன் செய்தால் அழைப்பை யாரும் எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் தினேஷ், காவல் நிலையத்திற்குள் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது புகார் கொடுக்க வந்த ஒரு வடமாநில வாலிபர் மேஜையில் வைக்கப்பட்டிருந்த தனது செல்போனை எடுக்கும் காட்சி பதிவாகியிருந்தது.