செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சிகளில் நூறுநாள் வேலை வாய்ப்பு முறையாக வழங்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சித்தாமூர் ஒன்றியம் கொளத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் நூறுநாள் வேலை வாய்ப்பு முறையாக வழங்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்யூர் வட்டக்குழுவின் சார்பில் சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முன்பு கடந்த வாரம் கஞ்சி காய்ச்சி, காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில், 2024-25ம் ஆண்டில் நூறுநாள் வேலை வாய்ப்பு தொடர்ந்து மற்றும் உடனே வழங்க வேண்டும்.
மேலும், 5 வாரங்களுக்கு மேல் வேலை செய்த தொழிலாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும், 200 நாள் வேலை வாய்ப்பு, ரூ. 600 கூலி வழங்க வேண்டும், நூறுநாள் வேலை வாய்ப்புக்கு ஆண்டுக்கு ரூ. 4 லட்சம் கோடி நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். போராட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் பிப்ரவரி 12ம் தேதியிலிருந்து தொடர்ந்து வேலை வழங்கப்படும் என அறிவித்ததின் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இந்நிலையில் எழுத்துப்பூர்வமாக வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் பணி வழங்காததை கண்டித்து கொளத்தூர் பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் வட்டார வளர்ச்சி அலுவலர் முற்றுகையிட்டு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.