
உத்திரமேரூரில் மின்னல் தாக்கி சிறுவன் பலி
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், தண்டரை கூட்டுச்சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் மகன் டேனியல் (9); மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் (அக்.,6) மாலை அப்பகுதியில் லேசான மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் டேனியல் அங்கிருந்த புளிய மரத்தின் கீழ் மழைக்கு ஒதுங்கியதாக கூறப்படுகிறது. அப்போது, மின்னல் தாக்கியதில் டேனியல் மயக்கமுற்று விழுந்தார். பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, '108' அவசரகால ஆம்புலன்ஸ் சேவை வாயிலாக, உத்திரமேரூர் வட்டார அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டேனியலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து, பெருநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.