
கொடைக்கானல்: தடை செய்யப்பட்ட இயந்திர பயன்பாடு அதிகரிப்பு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதியில் சில மாதங்களாக தடை செய்யப்பட்ட போர்வெல் பயன்பாடு, கம்ப்ரசர் கொண்டு துளையிட்டு வெடி வைத்து பாறைகள் தகர்க்கப்படும் சம்பவம், ராட்சஸ இயந்திரம் மூலம் மண் அள்ளுவது தாராளமாக நடக்கிறது. சின்னப்பலம் குடியிருப்பு பகுதியில் பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டு அதை கட்டுமான பணிக்கு விற்கும் போக்கு நீடிக்கிறது. இதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் முழு ஆதரவு அளிப்பது ஆச்சரியம். அதீத கனமழை பெய்யும் போது வயநாடு போன்று கொடைக்கானலும் நிலச்சரிவை சந்திக்கும் அபாயம் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அச்சப்படுகின்றனர். இயற்கை ஆர்வலர் பாலசுப்ரமணி கூறியதாவது: ஊட்டியில் இது போன்ற நிகழ்வால் அங்கு அவ்வப்போது நிலச்சரிவு, இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இது போன்ற நிலையை கொடைக்கானலும் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தாசில்தார் பாபு கூறுகையில், "தடை செய்யப்பட்ட இயந்திரங்களை பயன்படுத்துபவர்களுக்கு உடந்தையாக செயல்படும் வருவாய்த்துறை அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.