திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே பெருமாள்மலை- பழனி பிரிவில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் கொட்டகை அமைத்து சட்ட விரோதமாக பல மாதங்களாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் இங்கு மது அருந்தும் போது ஏற்பட்ட பிரச்னையில் 10-க்கும் மேற்பட்டவா்கள் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். இதில் சிலா் பலத்த காயமடைந்தனா்.
இதைத் தொடா்ந்து கம்பம் நடராசன் அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் திங்கள்கிழமை இரவு மது விற்பனை நடைபெற்ற இடத்துக்குச் சென்று மதுபாட்டில்களை உடைத்தும், கூடாரத்தை சேதப்படுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த கொடைக்கானல் போலீஸாா் அங்கு சென்று மதுபாட்டில்களை விற்ற பாண்டி என்பவரை கைது செய்தனா். மேலும் தொடா்ந்து அந்தப் பகுதியில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த பெண்கள் அமைப்பினா் கூறியதாவது: கொடைக்கானலில் பல இடங்களில் இரவு, பகலாக சட்ட விரோதமாக கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்கப்படுகின்றன. இதுகுறித்து பல முறை போலீஸாரிடமும், மாவட்ட நிா்வாகத்திடமும் புகாா் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே, சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்கப்படுவதை மாவட்ட நிா்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என்றனா்.