மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் பல்வேறு அரிய வகை விலங்குகள், பறவைகள் ஆகியவை வசித்து வருகின்றன. உள்நாட்டு பறவைகள் மட்டுமின்றி வெளிநாட்டு பறவை இனங்களும் வலசையாக இடம்பெயர்ந்து இங்குள்ள வனப்பகுதியில் வாழ்ந்து வருகின்றன. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஆண்டுதோறும் கோடைகாலம் தொடங்குவதற்கு சற்று முன்னதாக, விதவிதமான குருவிகள், வண்ணப்பறவைகள் ஆகியவை வலசை வரும்.
அதிலும் குறிப்பாக கால்களில் குறியீடு பொறிக்கப்பட்ட வளையத்துடன் வலசை வரும் குருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது மாலை மற்றும் இரவு நேரங்களில் பனிப்பொழிவு மற்றும் ரம்யமான குளிர் நிலவுவதால் பல்வேறு இடங்களில் பறவைகளின் ரீங்கார சத்தங்களும் கேட்டு வருகிறது. இவை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.