குறிஞ்சிப்பாடி: அரசு தொகுப்பு வீடு இடிந்து விழுந்த பரிதாபம்
குறிஞ்சிப்பாடி தாலூக்கா ஆடூர் குப்பம் கிராமத்தில் சுமார் 25 வருடங்களுக்கு முன் பத்துக்கு மேற்பட்ட அரசு தொகுப்பு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. அதில் மாரியம்மன் கோவில் தெரு அருகே அரசு கட்டிக் கொடுத்த தொகுப்பு வீட்டில் வசிக்கும் ஆறுமுகம்-திவ்யா குடும்பம் நடத்தி வந்தனர். இன்று(அக்.6) திடீரென்று காலையில் இவர்களுடைய வீடு தரைமட்டமாக இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக கணவன் மனைவி இரண்டு பெரும் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார்கள். அங்கு வசிக்கும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குறிஞ்சிப்பாடி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக கடலூர் மாவட்ட அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதே போல் அரசு தொகுப்பு வீட்டில் வசிக்கும் மக்கள் நம்முடைய வீடும் இடிந்து விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இவர்களுக்கு புதிய அரசு தொகுப்பு வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.