

கோவை: போக்குவரத்து அதிகாரிகளால் பிரச்சனை- தெஆபேச புகார்
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்த அதன் நிர்வாகிகளான கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தமிழகத்தின் வழியாக அண்டை மாநிலங்களுக்குச் செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகளை வட்டார போக்குவரத்து அலுவலர்கள், பயணிகளை இறக்கிவிட்டு பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகிறது என குற்றம் சாட்டினர். குறிப்பாக ஓசூரில் 29 பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கோவையில் ஐந்து பேருந்துகள் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறினர். தாங்கள் முறையாக மத்திய அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி டேக்ஸ் கட்டி பர்மிட் எடுத்தாலும் தமிழ்நாட்டில் இயக்க தனியாக வருடத்திற்கு 90 ஆயிரம் ரூபாய் வரை டேக்ஸ் கட்ட வேண்டும் என கூறி தங்களுடைய பேருந்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுவதாக வருத்தம் தெரிவித்த அவர்கள், இதே நிலை நீடித்தால் தமிழ்நாடு வழியாக தங்கள் பேருந்துகளை இயக்காத சூழல் ஏற்படும் என வேதனையோடு தெரிவித்துள்ளனர்.