கோவை: பொது மயானத்தை குப்பை கிடங்காக மாற்ற எதிர்ப்பு!

57பார்த்தது
கோவை, பீளமேடு விளாங்குறிச்சி சாலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பொது மயானத்தை குப்பை கிடங்காக மாற்றும் மாநகராட்சியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பீளமேடு, காந்திமா நகர், தண்ணீர் பந்தல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 50, 000க்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வந்த இந்த மயானம் சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு ஏக்கர் பரப்பளவில் மின் மயானம் அமைக்கப்பட்டது. மீதமுள்ள இரண்டு ஏக்கரில் சடலங்கள் புதைக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் மயானத்தில் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு, சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்களில் தோண்டி, அங்கிருந்த மனித எலும்புக் கூடுகள் மற்றும் மண்டையோடுகளை அகற்றியுள்ளது. ஆனால், அவற்றை முறையாக அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டதால், நாய்கள் அவற்றை எடுத்துச் சென்று ஆங்காங்கே வீசிச் செல்வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மயானத்தில் திரண்ட அப்பகுதி மக்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது, குடியிருப்புகள் அதிகம் உள்ள இந்த பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் குப்பை கிடங்கு அமைக்க திட்டமிட்டுள்ளது, இதை மாநகராட்சி கைவிட வேண்டும் இல்லை என்றால் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி