கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே பாகுபலி என்று மக்களால் அழைக்கப்படும் ஒற்றைக் காட்டு யானையின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த யானை பகல் நேரங்களில் வனப்பகுதிக்குள்ளும், இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களுக்குள்ளும் புகுந்து தொடர்ச்சியாக பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் உள்ள கவின் கார்டன் அருகே நேற்று இரவு திருமலைராஜா (45) என்பவருக்குச் சொந்தமான 4 ஏக்கர் பரப்பளவிலான பாக்குத் தோட்டத்திற்கு பாகுபலி யானை வந்துள்ளது. தோட்டத்தின் முன்பகுதியில் இருந்த காம்பவுண்ட் கேட்டை உடைத்து உள்ளே நுழைந்த யானை, அங்குள்ள சில பாக்கு மரங்களை சேதப்படுத்தியது. பின்னர், அருகிலுள்ள மற்றொரு தோட்டத்திற்குள் நுழைந்து அட்டகாசம் செய்தது.
பாகுபலி யானையின் தொடர் தாக்குதலால், விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள விவசாயப் பொருட்கள் சேதமடைந்து வருவதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இந்த யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும், விவசாய சங்கங்களும் பலமுறை போராட்டம் நடத்தியும் வனத்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.