தமிழ்நாடு டாஸ்மாக் துறையில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத் துறை அறிக்கை வெளியிட்டது. இதனை கண்டித்து பா. ஜ. க. வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, அரசு அலுவலகங்களில் முதல்வர் படம் மாட்டப்பட்டு இருப்பதை போல, ஒவ்வொரு அரசு டாஸ்மாக் கடைகளிலும் அவரது புகைப்படம் மாட்டப்படும் என பா. ஜ. க. வினர் அறிவித்தனர்.
இதனையடுத்து, கோவை சரவணம்பட்டியில் விளாங்குறிச்சி, விளாங்குறிச்சி ரோடு, சிவானந்தபுரம் மற்றும் சி. ஆர். ஐ டிரஸ்ட் ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பா. ஜ. க மகளிர் அணியை சேர்ந்த கார்த்திகா, குருமணி, சிந்துஜா, நதியா, தேவி, ஷியாமளா ஆகியோர் முதல்வர் படத்தை ஒட்ட முயன்றனர். அதேபோல், ரத்தினபுரி கண்ணப்பநகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ரத்தினபுரி மண்டல பா. ஜ. க தலைவர் அர்ஜூனன் தலைமையில் லட்சுமி, ராம்பிரபு, தாமரைகண்ணன், ராஜலட்சுமி, ஸ்ரீனிவாசன், ராமகிருஷ்ணன், மற்றொரு ஸ்ரீனிவாசன், துரை ஆகியோரும் முதல்வர் படத்தை ஒட்ட முயன்றனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த சரவணம்பட்டி மற்றும் ரத்தினபுரி போலீசார் அவர்கள் அனைவரையும் கைது செய்தனர். இந்த நிலையில் சரவணம்பட்டி மற்றும் ரத்தினபுரி பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடை சூப்பர்வைசர்கள் அளித்த புகாரின் பேரில் 15 பேர் மீது கலவரத்தை தூண்டுதல், அத்துமீறல் மிரட்டல் உட்பட 6 பிரிவுகளில் நேற்று வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.