கோவை உக்கடம் சி. எம். சி. காலனியில் துப்புரவு பணியாளர்களுக்காக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள், முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்பட்டு 6 மாதங்கள் ஆகியும், திமுக நிர்வாகிகளின் தலையீட்டால் பயனாளிகளுக்கு ஒதுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், வீடுகளை ஒதுக்க வலியுறுத்தி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை உக்கடம் மற்றும் வெரைட்டி ஹால் ரோட்டில் துப்புரவுப் பணியாளர்களுக்காக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி திறக்கப்பட்டன. ஆனால், திமுக நிர்வாகிகள் தங்கள் கட்சியைச் சேர்ந்த துப்புரவு பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததால், பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கப்படவில்லை.
இதனால், தகரக் கொட்டகையில் வசிக்கும் துப்புரவுப் பணியாளர்கள் ஆத்திரமடைந்து, அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்டாலின்தான் வர்ராரு வீடு தர போறாரு என்று கேலி செய்து பாட்டு பாடியவாறு ஆளுக்கு ஒரு வீட்டை திறந்து உள்ளே புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வேண்டும் வேண்டும் வீடு வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுவரை வீடு பெறாத குடும்பத்திற்கு முதலில் ஒதுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர்.