திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மல்லிகா (69) என்பவர் கடந்த 8. 3. 2025 அன்று பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்தார். அப்போது, அவரது கழுத்தில் இருந்த 9 சவரன் தங்க நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர்.
இதுகுறித்து மல்லிகா பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நடத்திய தீவிர விசாரணையில், வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த அமுதா (39), தேவயானி (23) மற்றும் மீனா (37) ஆகியோர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, மூன்று பேரையும் நேற்று கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து திருடப்பட்ட நகைகளை மீட்டனர். பின்னர், அவர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். கைதான மூவரும் அசோக் நகர், வடபழனி, ஜோலார்பேட்டை, உடுமலை, திருப்பூர் வடக்கு மற்றும் நாமக்கல் காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.