கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களை இணைக்கும் முக்கியப் பகுதியாக அன்னூர் விளங்குகிறது. இதனால், இப்பகுதி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், நேற்று (மார்ச் 29) அமாவாசை தினம் என்பதால் வழக்கத்தைவிட அதிகமாக வாகனங்கள் சென்றன.
கருமத்தம்பட்டி பகுதியில் இருந்து கோவை நோக்கி அன்னூர் வழியாக வந்த கண்டைனர் லாரி ஒன்று திடீரென நடுரோட்டில் பழுதாகி நின்றது. இதனால், சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, கோவை சாலை, அவிநாசி சாலை ஆகிய அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சுமார் மூன்று மணி நேரம் வரை லாரியில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய முடியவில்லை.
இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். இதையடுத்து, லாரியின் பழுது சரி செய்யப்பட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. அதன் பின்னர், போக்குவரத்து சீரானது.