சென்னை: தமிழக மீனவர்கள் தொடர் கைது - ராமதாஸ் கண்டனம்
இந்திய இறையாண்மைக்கு சவால் விடுக்கும் வகையில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில், அதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் எந்தவிதமான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாதது வருத்தமளிக்கிறது. இந்த சிக்கலுக்கு எப்போது தீர்வு காணப்படுமோ, அப்போது தான் மீனவர்கள் நிம்மதியாக வாழ முடியும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை சிங்கள கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களின் மீன்பிடி படகு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் மீதான சிங்கள கடற்படையினரின் தொடர் அத்துமீறல்கள் கண்டிக்கத்தக்கவை. தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்குடன் கடந்த மாதம் 29-ம் தேதி மீனவர் பிரச்சினைக்கான இந்திய - இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் மீனவர் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் இரு நாட்டு மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தைகளை விரைந்து நடத்த ஏற்பாடு செய்யும்படி மத்திய அரசு மாநில அரசு வலியுறுத்த வேண்டும். இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை மாவட்ட மீனவர்கள் 12 பேரையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.