அமரன் திரைப்படம் எதிர்ப்பு என்ற பெயரில் பிரிவினை சித்தாந்தத்தை இங்கே விதைக்க சிலர் முயற்சித்து வருகின்றனர். அதை ஆரம்பத்திலேயே தமிழக அரசு தடுத்து நிறுத்த விட்டால் விளைவுகள் மோசமாகிவிடும் என்பதை தமிழக அரசு உணர வேண்டும் என்று பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ. என். எஸ். பிரசாத் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீடாக இருந்தாலும், நாடாக இருந்தாலும் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியம். இன்று சென்னை போன்ற பெரு நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளின் பாதுகாப்புக்கு, சீருடை அணிந்த நபர்களை நிறுத்தி இருக்கிறார்கள். யாரை பார்க்க வேண்டுமோ அவர்களின் ஒப்புதலை வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக பெற்ற உள்ளே அனுமதிக்கிறார்கள். 50 வீடுகள், 100 வீடுகள் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கே இந்த அளவுக்கு பாதுகாப்பு தேவை இருக்கும்போது, 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவுக்கு பாதுகாப்பு என்பது எந்த அளவுக்கு முக்கியமானது என்பதை யாரும் சொல்ல வேண்டியதில்லை.
தேசபக்தியை வலியுறுத்தும், மாணவர்களை தேசிய மாணவர் படையிலும், ராணுவத்திலும் சேர தூண்டும் அமரன் திரைப்படத்துக்கு தமிழக அரசு வரி விலக்கு அளித்து, இதுபோன்று மேலும் பல படங்கள் வெளிவர ஊக்கமளிக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் அமரன் திரைப்படத்தை திரையிடவும் தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.