மக்கள் நலக் களப்பணி என்ற பெயரால் முதல்வர் ஸ்டாலின் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து மக்களை ஏமாற்றாமல், மக்கள் நலத் திட்டங்களை முழுமையாக செயல்படுத்தும் வகையில் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்று பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் நிர்வாகம் மேம்பட, முதல்வர் நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும் என்ற பாஜகவின் வேண்டுகோளை முழு மனதோடு ஏற்று, மாவட்டம் தோறும் நடக்கும் மக்கள் நலத் திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்ய, களப்பணிக்குச் செல்லும் முதல்வருக்கு தமிழக பாஜக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழக அரசின் சார்பில் நிறைவேற்றப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள், மற்றும் வளர்ச்சிப்பணிகள் மக்களுக்கு முழுமையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதை அறிய மாவட்டம் வாரியான களஆய்வை கோவையில் முதல்வர் தொடங்கி வைத்ததை பாஜக வரவேற்கிறது. தமிழக முதல்வர் மத்திய அரசின் மீது வீண்பழிகளைச் சுமத்தி விளம்பர அரசியல் செய்யாமல், மத்திய அரசுடன் துணைநின்று தமிழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாகச் செயல்பட வேண்டும். தமிழகத்தின் அனைத்து மக்களுக்கும் மக்கள் நலத்திட்டங்கள் போய்ச் சேரும் வண்ணம், தேர்தல் அரசியலை மறந்து மக்கள் நல அரசியலை முன்னெடுத்து மாவட்டம் தோறும் தன்னுடைய களப்பணியைச் சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.