விருதுநகர்: ஆசிரியையிடம் செயின் பறித்த 2 பேர்; வளைத்துப் பிடித்த போலீஸ்-வீடியோ
தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்தவர் அந்தோனி எட்வர்ட் யூஜின் என்பவர் மனைவி சாந்தி சில்வியா(54). இவர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வெம்பூர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த அக்டோபர் 28 ம் தேதி பள்ளி முடிந்து தூத்துக்குடி செல்வதற்காக அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி பகுதியில் புதூர் விலக்கில் பேருந்துக்காக சாந்தி சில்வியா காத்திருந்தபோது அவ்வழியாக பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் சாந்தி சில்வியா கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்க நகையை பறித்து கொண்டு தப்பி ஓடினர். இது குறித்து சாந்தி சில்வியா அளித்த புகாரின் அடிப்படையில் பந்தல்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீசாரின் விசாரணையில் ஆசிரியையிடம் தங்க நகையை பறித்து சென்றது தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த பின்லேடன் (எ) லேடன்(23) மற்றும் தூத்துக்குடி ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த ஹனிபா மரக்காயர்(24) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மூன்று சவரன் தங்க நகை மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.