சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்ற மகனை மீட்டு தரக்கோரி பெற்றோர்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனிடம் மனு அளித்தனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கூத்திப்பாறையை சேர்ந்த ராமதாஸ். இவரது மகன் விஜயகுமார் ( 26), ஐடிஐ படித்துள்ளார். இவருக்கு விமுஷிலா தேவி என்ற மனைவியும் பிறந்த மூன்று மாதங்கள் ஆன ஆண் குழந்தை உள்ளது.
வெளிநாடு செல்வதற்காக ரூபாய் ஒரு லட்சம் செலுத்தி மதுரையைச் சேர்ந்த ஏஜென்ட் ஆயிஷா மூலமாக சவுதி அரேபியாவில் உணவகத்திற்கு உதவியாளர் பணிக்கு மாதம் ரூபாய் 27, 000 சம்பளத்திற்கு சென்றுள்ளார்.
உணவகத்தில் பணிக்கு சேர்ந்த அவருக்கு கடந்த ஆறு மாதங்களாக ஊதியம் ஏதும் வழங்கப்படவில்லை என தொலைபேசி மூலமாக பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் தன்னை மீட்க வேண்டுமென வீடியோ கால் அழைப்பு மூலமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பெற்றோர்கள் மகனை மீட்டுத் தரக் கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். மேலும் மனு அளித்து 40 நாட்கள் கடந்த நிலையிலும் மீண்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மீண்டும் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் ராமதாஸ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஆட்சியர் ஜெயசீலனை சந்தித்து மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.