விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்(47). இவர் கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி திருச்சுழி சாலையில் உள்ள டீக்கடை முன்பு தனது இருசக்கர வாகனத்தை(ROYAL ENFIELD) நிறுத்திவிட்டு சென்றபோது மர்ம நபர்கள் ஜெயபிரகாஷ் இருசக்கர வாகனத்தை திருடி சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஜெயபிரகாஷ் அளித்த புகார் அடிப்படையில் மாவட்ட எஸ்பி கண்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார்ஜ் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டதில் இருசக்கர வாகனத்தை திருடி சென்றது சேலம் மாவட்டம் ஜாகிர் சின்னம்மா பாளையம் பகுதியைச் சேர்ந்த கவி பாரதி(20) மற்றும் கமுதி அருகே அபிராமம் கிராமத்தை சேர்ந்த மணிபாரதி(20) என்பது தெரியவந்தது. இதில் இளம்பெண் கவி பாரதிக்கு அனைத்து வகையான இருசக்கர வாகனங்களையும் ஓட்ட தெரியும் என்பதும் தனது ஆண் நண்பர்களுடன் இணைந்து இருசக்கர வாகனங்களை திருடியதும் தெரிய வந்தது. இவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் இவர்களின் கூட்டாளியான சிவகாசியை சேர்ந்த முருகன் என்பவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து இரண்டு இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.