
விக்கிரவாண்டி: பெண் உயிரிழப்பு; ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
விக்கிரவாண்டியை அடுத்துள்ள தொரவி தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த ரெமிஜோஸ் மனைவி ஜெனிபர் (27). இவர்களுக்கு 2019-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. குழந்தை பேறு தொடர்பாக விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜெனிபர் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு 2024ஆம் ஆண்டு ஜன. 26-ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் கர்ப்பபை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், மறுநாள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஜெனிபர் உயிரிழந்தார். மருத்துவமனை நிர்வாகத்தின் கவனக் குறைவு, பொறுப்பற்ற சிகிச்சையால்தான் ஜெனிபர் உயிரிழந்ததாக விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் ரெமிஜோஸ் புகார் தெரிவித்தார். இதுதொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை வேண்டி விழுப்புரம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ரெமிஜோஸ் வழக்குத் தொடுத்தார். வழக்கை விசாரித்த நுகர்வோர் ஆணையத் தலைவர் சதீஷ்குமார் புதன்கிழமை தீர்ப்பு வழங்கினார். மருத்துவமனை நிர்வாகத்தின் கவனக்குறைவால் ஜெனிபர் உயிரிழந்தது தெளிவாகியுள்ளதால் தொடர்புடைய மருத்துவமனை நிர்வாகம், சிகிச்சையளித்த இரு மருத்துவர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், இந்தத் தொகையை தீர்ப்பளிக்கப்பட்ட ஒரு வாரத்துக்குள் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.