செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் தாலுகா, கிளாம்பாக்கம் பகுதியை சேர்ந்த குப்புசாமி மகன் சதீஷ், 26; இவருக்கும், திண்டிவனம் அடுத்த ஆலப்பாக்கத்தை சேர்ந்த நர்மதா, 23; என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்தாண்டு செப். 5ம் தேதி, மயிலத்தில் உள்ள கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். நர்மதா, விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் பி. எஸ்சி. , படித்ததற்கான சான்றிதழை வாங்க, தனது கணவர் சதீஷ் மற்றும் தந்தை கணேசன் உள்ளிட்டோருடன் கல்லுாரிக்கு சென்றார். அங்கு சான்றிதழ் வாங்கிய பின் வெளியே வந்த கணேசன், தங்கள் வீட்டிற்கு நர்மதாவை அழைத்துச் சென்று 10 நாட்களுக்கு பின், ஊருக்கு அனுப்பி வைப்பதாக சதீஷிடம் கூறிவிட்டு, நர்மதாவை அழைத்துச் சென்றார். பின்னர் சதீஷ், ஆலப்பாக்கம் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு நர்மதாவும், அவரது பெற்றோரும் இல்லை. இதுகுறித்து சதீஷ், விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதில், தனது மனைவியை அவரது தந்தை கணேசன் மற்றும் உறவினர்கள் 3 பேர் கடத்திச் சென்று விட்டதாக கூறியிருந்தார். அதன்பேரில் கணேசன் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.