வேங்கைவயல் கிராமத்தில் குடிநீா்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாக அறிவித்து, சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகக் கூறியும், இதைக் கண்டித்தும், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரியும் புரட்சிப் பாரதம் கட்சி சாா்பில் வியாழக்கிழமை பேரணி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை மாலை புரட்சிப் பாரதம் கட்சியினா் கூடினா். பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக விழுப்புரம் ஏ. எஸ். பி. ரவீந்திரகுமாா் குப்தா தெரிவித்தாா். அனுமதியின்றி தடையை மீறி புரட்சிப் பாரதம் கட்சியினா் முழக்கங்களை எழுப்பியவாறு ஊா்வலமாகப் புறப்பட முயன்றனா். இதையடுத்து, கட்சியின் மாநிலத் துணைச் செயலா் பூவை. ஆறுமுகம் தலைமையில், விழுப்புரம் மாவட்டச் செயலா்கள் தமிழரசன், கஜேந்திரன், ஆற்காடு திருநாவுக்கரசு, கோபிநாதன், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலா் ஓவியா் பாபு, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தீபன், மாவட்ட அமைப்பாளா் செல்வராஜ், மாவட்டப் பொருளாளா் ஜெகன், வழக்குரைஞா் பிரிவு மாவட்டச் செயலா் அம்ரோஸ் ராஜ் உள்ளிட்டோா் தடையை மீறி பேரணியாகச் செல்ல முயன்றபோது போலீஸாா் அவா்களைக் கைது செய்தனா். 31பேரும் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.