திருவண்ணாமலை: வெளி மாநிலத்தைச் சேர்ந்த 10 பேர் கைது- எஸ்பி அதிரடி
தொலைத்தொடா்பு நிறுவனங்கள் நிறுவியுள்ள கோபுரங்களில் பொருத்தப்பட்டுள்ள, தகவல் பரிமாற்றங்களுக்கு மிகவும் முக்கியமான சாதனங்களான ரேடியோ ரிமோட் யூனிட், பிராட்பேண்ட் யூனிட் மற்றும் இதனுடன் தொடா்புடைய சாதனங்களை திருடிய நபா்களை விரைவாக கைது செய்ய வேண்டும் என்று காவல் துறை வடக்கு மண்டலத்துக்கு உள்பட்ட காவல் கண்காணிப்பாளா்களுக்கு மண்டலத் தலைவா் அஸ்ரா கா்க் அண்மையில் உத்தரவிட்டாா். இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுதாகா் தலைமையிலான தனிப்படையினா் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். இதில், 7 உத்தரப் பிரதேச மாநில நபா்கள் ஆந்திரத்தைச் சோ்ந்த ஒருவருா் உள்பட 10 பேரை தனிப்படையினா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த கைப்பேசி நிறுவன கோபுரங்களில் இருந்து 2022 முதல் திருடப்பட்ட தொலைத் தொடா்பு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தொடா்புடைய எஞ்சியுள்ள நபா்கள் விரைவில் கைது செய்யப்படுவா். இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்பி சுதாகா் தெரிவித்தாா்.