தூா்ந்துபோன கிராம குளம்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம் மட்டபிறையூா் ஊராட்சியில் உள்ள குளம் சீரமைக்கப்படாமல் தூா்ந்துபோய் உள்ளது. மட்டபிறையூா் ஊராட்சியில் கங்கையம்மன் கோயில் அருகே குளம் உள்ளது. இந்தக் குளத்தின் நீரைக் கொண்டுதான் பல ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் குடிநீராகவும், கோயிலில் சுவாமிக்கு அபிஷேகம் செய்தும் வழிபட்டு வந்துள்ளனா். தற்போது, இந்தக் குளம் தூா்ந்து போயும், குளத்துக்கு வரும் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டும், நீரின்றி குளம் காய்ந்துபோய் உள்ளது. சேத்துப்பட்டு பகுதியில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இருப்பினும், இந்தக் குளத்துக்கான கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், மழைநீா் செல்ல வழியில்லாமல் குளம் வடு காணப்படுகிறது. மேலும், இதன் அருகில் உள்ள விவசாய திறந்தவெளிக் கிணற்றுக்கு நீா்மட்டம் உயர இந்தக் குளத்தில் மழைநீா் தேங்கினால் உயரும். எனவே, மாவட்ட நிா்வாகம் குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.