தஞ்சை: வயலில் பதிக்க வைத்திருந்த எரி சாராய பாட்டில்கள் பறிமுதல்
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, பந்தநல்லூர் அருகே கருப்பூர் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்த சுக்குரு மகன் கலியபெருமாள் (47). இவர் கருப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் அனுசுயாவின் கணவர் ஆவார். இவர் பாண்டிச்சேரி மது பாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பந்தநல்லூர் காவல் ஆய்வாளர் கவிதா தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் கருப்பூர் கிராமத்தில் வயலில் பதுக்கி வைத்திருந்த பாண்டிச்சேரி மாநில எரிசாராய பாட்டில்கள் மூட்டை மூட்டைகளாக கண்டெடுக்கப்பட்டது. 10க்கும் மேற்பட்ட மூட்டைகளில் வைத்திருந்த 1700 எரிசாராய பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட கருப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் அனுசுயாவின் கணவர் கலியபெருமாள் மற்றும் அவரது சகோதரர் வீராசாமி, மனைவி வசந்தி ஆகிய இருவரையும் பந்தநல்லூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.