கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 9 பேர் படுகாயம்
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் எஸ்பிஐ வங்கி அருகில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒன்பது பேர் படுகாயம் அடைந்தனர். கும்பகோணம் விவேகானந்தர் நகர் நடராஜன், மடத்து தெரு ராஜாராமன், அம்மாசத்திரம் கிருஷ்ணகுமார், சீனிவாசநல்லூர் ஆதப்பன், செட்டிமண்டபம் சிவமயில்வேலன் ஆகியோர் சிஆர்சியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள். இந்த ஐந்து பேரும் திருமண நிகழ்ச்சிக்காக கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி காரில் பயணம் செய்தனர். சென்னையை சேர்ந்த ஞானப்பிரகாசம், தேன்மொழி, நரேன், சோமு ஆகிய நான்கு பேரும் திருவிடைமருதூர் கோவிலில் வழிபாடு செய்ய காரில் வந்து கொண்டிருந்தனர். இந்த இரண்டு கார்களும் திருவிடைமருதூர் எஸ்பிஐ வங்கி அருகில் வரும்பொழுது நேருக்கு நேர் மோதி கொண்டதில் காரில் பயணித்த ஒன்பது பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்களை போலீசார் மற்றும் பொதுமக்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து திருவிடைமருதூர் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.