திருவிடைமருதூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா, பந்தநல்லூர் அருகே வேலூர் மற்றும் நல்லாதடி பகுதிகளில் பழவாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக இரண்டு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்த நிலையில், அதனை கட்டுப்படுத்தும் விதமாக வருவாய்த்துறை சார்பில் மணல் மூட்டைகள் அடுக்கி வைத்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பாதிப்படைந்த இப்பகுதி மக்களை நல்லாதடி மற்றும் வேலூரில் உள்ள அரசு பள்ளியில் தங்க வைப்பதற்கான முழு ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. இந்நிலையில் பாதிப்படைந்த பகுதிகளில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், கும்பகோணம் சார் ஆட்சியர், திருவிடைமருதூர் வட்டாட்சியர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.