திருநாகேசுவரம் நாகநாத சுவாமி கோயில் சன்னதி தெருவில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான புல எண் 195/1-இல் 1, 744 சதுர அடியில் தனியாா் தங்கும் விடுதி மற்றும் கடைகள் வைத்திருந்தவா் வாடகை தராததால் தொடா்ந்த வழக்கில் கடந்த 5/6/2018-இல் அறநிலையத்துறையினா் சம்மந்தப்பட்ட இடத்தை சுவாதீனம் எடுத்துக்கொள்ளலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி வியாழக்கிழமை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் போலீஸாா் பாதுகாப்புடன் தங்கும் விடுதி மற்றும் கடைகளுக்கு சென்று ‘சீல்’ வைத்தனா்.
இதையடுத்து, அங்கிருந்தவா்கள் இந்து சமய அறநிலையத் துறையைக் கண்டித்து அதிகாரிகளை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். முற்றுகையிட்ட 18 போ்களை திருநீலக்குடி போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் அடைத்தனா்.
இதுகுறித்து திருநாகேசுவரத்தைச்சோ்ந்த ஆறுமுகம் என்பவா் கூறியது: இது தொடா்பான வழக்கு நிலுவையில் உள்ள போதே அறநிலையத் துறையினா் விடுதி மற்றும் கடைகளுக்கு ‘சீல்’ வைத்துள்ளனா். இதனைக் கண்டித்து, தொடா்ந்து கடையடைப்பு போராட்டம் நடத்துவோம் என்றாா்.
இதுகுறித்து அறநிலையத்துறை துணை ஆணையா் தா. உமாவிடம் கேட்டபோது, சம்மந்தப்பட்ட இடத்தில் வாடகைக்கு இருந்தவா் தொடா்ந்த பல்வேறு வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதன் காரணமாக இடத்தை அறநிலையத்துறை சுவாதீனம் செய்தது என்றாா்.