தென்காசி: மாலை அணிந்து விரதம் மேற்கொண்ட ஐயப்ப பக்தர்கள்
ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் 1ம் தேதி ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்குவது வழக்கம். 41 நாட்கள் விரதம் மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டி சென்று வழிபாடு நடத்துவர். இந்த ஆண்டு இன்று கார்த்திகை 1ம் தேதியை முன்னிட்டு தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் ஐயப்ப பக்தர்கள் புனித நீராடினர். பின்னர் அருவிக்கரை ஓரம் உள்ள விநாயகர் சன்னதி மற்றும் குற்றாலநாதர் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தி மாலை அணிந்து விரதம் துவங்கினர். அப்போது சாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தி கோஷங்களை பக்தர்கள் எழுப்பினர்.மேலும் கேரள மாநிலம் அச்சன்கோவில் ஐயப்பன் கோவில், ஆரியங்காவு ஐயப்பன் கோவிலுக்கு தமிழகத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வழிபாடு நடத்தி மாலை அணிந்து விரதம் துவக்கினர். இதனால் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்களது விரதத்தை துவக்கினர். இதனால் கோவில்களிலும் பக்தி கோஷங்கள் ஒலித்துக் கொண்டிருந்தது.தென்காசி பகுதியில் உள்ள ஐயப்ப பக்தர்கள் தினமும் காலை மாலை இரு வேளைகளிலும் குற்றால அருவிகளில் புனித நீராடி செல்வர். மேலும் வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் குற்றால அருவிகளில் புனித நீராடி செல்வது வழக்கம்.