சிவகங்கை: கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டுகள் சிறை
சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூரை சேர்ந்தவர் சிவக்குமார் இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு பட்டா மாறுதல் கேட்டு இடைக்காட்டூரில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் சாஸ்தா (68) என்பவரிடம் விண்ணப்பித்தார். அப்போது பட்டா மாறுதலுக்கு ரூ1500 லஞ்சம் தர வேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலர் சாஸ்தா கூறினாராம். பணம் கொடுக்க விரும்பாத சிவகுமார் இதுகுறித்து சிவகங்கையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். பின்னர் கடந்த 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி கிராம நிர்வாக அலுவலரிடம் ரசாயன பவுடர் தூவப்பட்ட பணம் கொடுக்கும் பொழுது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சாஸ்தா மீது சிவகங்கையில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரணை செய்த நீதிபதி செந்தில் முரளி குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் சாஸ்தாவிற்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும் ரூ. பத்தாயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.