சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி முத்தையா காலனி குடியிருப்பு பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு குழந்தை சத்தம் கேட்டுள்ளது. அந்த பகுதி குடியிருப்பு வாசிகள் தேடியபோது பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று கழுத்து, கை அறுபட்ட நிலையில் உயிருக்கு போராடிய குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே பச்சிளம் குழந்தையை மீட்ட அப்பகுதி பெண் சிங்கம்புணரி தாலுகா தலைமை மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தார். அங்கு குழந்தை கழுத்து, கை அறுக்கப்பட்ட நிலையில் பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே சிங்கம்புணரி அரசு மருத்துவமனை மருத்துவர் கார்த்திகேயன் மற்றும் பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய குழந்தைகள் நல மருத்துவர் சுருதி ஆகியோர் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேலும் குழந்தைக்கு மேல்சிகிச்சை அளிப்பதற்காக 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். குழந்தை கழுத்து, கை அறுபட்டு அழ முடியாமல் கத்திய சத்தம் கேட்டு மீட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குழந்தை பிறந்து சில மணி நேரத்தில் தொப்புள் கொடியுடன் கழுத்து, கையை அறுத்து தூக்கி வீசி சென்றது யார்? என சிங்கம்புணரி போலீசார் இன்று புதன்கிழமைகாலை முதல் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.