சிவகங்கை: லஞ்சம் கேட்ட ஊராட்சி மன்ற தலைவி கணவருடன் கைது
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை சேர்ந்தவர் காளீஸ்வரன். இவர் அதே பகுதியில் புதிய வீடு கட்ட காளையார்கோயில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அனுமதி கோரினார். அதற்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. கையூட்டு கொடுக்க விரும்பாத காளீஸ்வரன் இது குறித்து சிவகங்கை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். இதனை அடுத்து போலீசாரின் அறிவுறுத்தலின்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுக்க ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்ற போது, ஊராட்சி மன்ற தலைவி ஜோஸ்பீன் மேரி அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றதால் அவரது, இருக்கையில் அவரது கணவர் அருள்ராஜ் இருந்துள்ளார். அருள்ராஜ் தனது மனைவியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு ரூ 5,000 லஞ்சப்பணத்தை பெற சம்மதித்துள்ளார். காளீஸ்வரன் லஞ்ச பணத்தை அருள்ராஜிடம் கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளர் ஜான் பிரிட்டோ தலைமையிலான போலீசார் கையும் களமாக பிடித்து கைது செய்தனர். மேலும், அரசு விழாவில் கலந்து கொண்டிருந்த ஊராட்சி மன்ற தலைவியை வெளியே வரவழைத்து அவரையும் கைது செய்தனர். மேலும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தற்காலிக உதவியாளர் குமார் என்பவரையும் கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மேல் விசாரணை செய்து வருகின்றனர். காளையார்கோவிலில் வீடு கட்ட அனுமதி வழங்க ஊராட்சி மன்றத் தலைவி கணவருடன் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.