சேலம் ஏற்காட்டுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய வெளிமாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் அரையாண்டு தேர்வு முடிந்து தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் ஏற்காட்டிற்கு படையெடுத்துள்ளனர். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஏற்காட்டிலும் குளிர்காலச் சூழல் நிலவுகிறது. நேற்று காலை முதல் ஏற்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. மேலும் கடும் பனிமூட்டத்தால் ஏற்காடு ஏரி முழுவதும் பனிபடலம் போல காட்சியளித்தது.
இதனால் ஏற்காட்டில் நிலவிய கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் அண்ணா பூங்கா, லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம் போன்ற பல்வேறு சுற்றுலாத்தலங்களுக்கு சென்று மகிழ்ந்தனர். ஏற்காட்டில் கடும் பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே வாகனங்களை ஓட்டிச்சென்றனர். ஏற்காடு ஏரியை சுற்றி பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டதால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி ஏற்காடு ஏரியில் விசைப்படகில் மட்டுமே படகு சவாரி செய்ய அனுமதி அளித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் பெரிதும் ஏமாற்றத்திற்கு உள்ளாகினர்.