ஏற்காட்டில் வனத்துறை சார்பில் பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது. இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
போட்டியை மாவட்ட வன அலுவலர் காஷ்யா ஷஷாங் ரவி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டியானது ஏற்காடு மலைப்பாதை 20-வது கொண்டை ஊசி வளைவில் தொடங்கி சுற்றுச்சூழல் பூங்கா வரை 5½ கிலோமீட்டர் தூரம் நடந்தது. மாரத்தான் போட்டியில் விநாயகா மிஷன் உடற்பயிற்சி கல்லூரியை சேர்ந்த மாணவர்கள், மாணவிகள், இளைஞர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
போட்டியில் நிஷாந்த் என்பவர் 22.39 நிமிடத்தில் 5½ கிலோமீட்டர் தூரத்தை கடந்து முதல் இடத்தையும், சஞ்சய் 2-ம் இடத்தையும், தீபக் 3-ம் இடத்தையும் பிடித்தனர். தொடர்ந்து முதல் 5 இடம் பிடித்தவர்களுக்கு சான்றிதழுடன் கூடிய கோப்பை வழங்கப்பட்டது. இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.