சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள 74, கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவருக்கு தவமணி என்று மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். அசோக்குமார் கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் ஆட்டோ மோட்டார் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி வீட்டுக்கு வந்த அசோக்குமார் மனைவி தவமணி மற்றும் மூன்று குழந்தைகளை அதிகாலை நேரத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் நிகழ்விடத்திலேயே வித்திய தாரணி, அருள் பிரகாஷ் ஆகிய இரு குழந்தைகள் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த தவமணி மற்றும் அருள் பிரகாஷினி ஆகியோரை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தொடர்ந்து இருவரையும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தவமணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஆறு நாட்களுக்குப் பின் சிகிச்சை பலனின்றி தவமணி உயிரிழந்ததை அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.