சிறுத்தை மர்ம சாவு: கிராம மக்களிடம் வனத்துறையினர் விசாரணை
சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றியம் தின்னப்பட்டி ஊராட்சியை சேர்ந்த வெள்ள கரட்டூர் கிராமத்தில் பாறைகளில் பதுங்கி இருந்த சிறுத்தை ஆடு, கோழிகளை கடித்து குதறி அட்டகாசம் செய்து வந்தது. இந்த சிறுத்தை நேற்று முன்தினம் மர்மமான முறையில் செத்து கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் வெள்ளக் கரட்டூர் கிராமத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் சிறுத்தை விஷம் வைத்து கொல்லப்பட்டதா? என விசாரணை நடத்தினர். இதனிடையே சிறுத்தை இறந்ததற்கான காரணம் குறித்து கிராமமக்கள் மற்றும் விவசாயிகளிடம் நேற்று வனத்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் அந்த பகுதியில் முகாமிட்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.