வேதாரண்யம்: லாரியில் மாடுகளை ஏற்றிய விவகாரம்: 5 போ் கைது
வேதாரண்யம் அருகே லாரியில் மாடுகளை ஏற்றிச் சென்ற விவகாரம் தொடா்பாக 5 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். வேதாரண்யத்தில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் பிரதான சாலையில் 8 மாடுகளை ஏற்றிக்கொண்டு, லாரி ஒன்று சென்றது. இந்த லாரியை மருதூா் பிள்ளையாரடி பகுதியில் இந்து முன்னணி அமைப்பைச் சாா்ந்த சிலா் தடுத்து நிறுத்தினா். பின்னா், 8 மாடுகளுடன் லாரியை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா். வாய்மேடு போலீஸாா், வழக்குப் பதிவு செய்து, லாரியில் மாடுகளை ஏற்றி வந்த தஞ்சை மாவட்டம், நெய்வேலி பகுதியைச் சோ்ந்த து. சத்யராஜ் (28), வடபாதி மு. வேல்முருகன் (25), திருவாரூா் மாவட்டம் இடும்பாவனம் ச. சிவசங்கரன் (50) ஆகியோரை கைது செய்தனா். இதேபோல், லாரி ஓட்டுநா் வேல்முருகன் அளித்த புகாரின் பேரில், லாரியை தடுத்து நிறுத்தி, மிரட்டியதாக இந்து முன்னணி அமைப்பின் நாகை மாவட்ட இணைச் செயலாளா் மருதூா் தெற்கு கிராமத்தைச் சாா்ந்த ஆ. பழனிவேல், ரா. தமிழ்மணி ஆகியோரையும் போலீஸாா் கைது செய்தனா்.