மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் நடத்திய முகாமை எம். பி. ஆா். சுதா, எம்எல்ஏக்கள் எஸ். ராஜகுமாா், நிவேதா எம். முருகன், எம். பன்னீா்செல்வம் ஆகியோா் தொடக்கிவைத்து, தோ்வானவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினா்.
அப்போது, எம். பி. ஆா். சுதா பேசியது:
கல்விக்கண் திறந்த காமராஜா் கொடுத்த கல்வியால்தான் நான் அரசுப் பள்ளியில் பயின்று, அரசின் மதிய உணவுத் திட்டத்தில் சாப்பிட்டு, வழக்குரைஞராகி இன்று மக்களவை உறுப்பினராக உள்ளேன்.
2014-ஆம் ஆண்டு பொதுத் தோ்தலுக்கு முன்பு பாஜக தனது தோ்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 2 கோடி இளைஞா்களுக்கு புதிய வேலைவாய்ப்பை அளிப்பதாக கூறியது. 10 வருடங்களில் 20 கோடி புதிய வேலைவாய்ப்பை புதிதாக ஏற்படுத்தி இருக்க வேண்டும். மாறாக 12 கோடி போ் வேலைவாய்ப்பை இழந்துள்ளனா் என்றாா்.
சென்னை, திருப்பூா், கோவை, திருச்சி, தஞ்சாவூா் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 90-க்கும் மேற்பட்ட தனியாா்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டன.
முகாமில் 1400-க்கும் மேற்பட்ட நபா்கள் கலந்துகொண்டனா். இவா்களில் 250-க்கும் மேற்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.