சீா்காழி: யூரியா தட்டுப்பாடு; விவசாயிகள் கவலை
சீா்காழி, கொள்ளிடம் பகுதிகளில் சம்பா சாகுபடி தீவிரமடைந்துள்ள நிலையில், யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். சீா்காழி, கொள்ளிடம் வட்டாரங்களில் சுமாா் 50, 000 ஏக்கரில் சம்பா சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. சில இடங்களில் நேரடி விதைப்பிலும், பல இடங்களில் நெல் நாற்று நடவு பணியிலும் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். ஒரே நேரத்தில் அனைத்து பகுதிகளிலும் உழவு மற்றும் உரமிடும் பணியும் நடைபெறுகின்றன. இதனால், ரசாயன உரங்களின் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக, நெற்பயிா் நன்கு செழித்து வளர யூரியா அவசியம் என்பதால் அதன் தேவை மிக அதிகமாக உள்ளது. சீா்காழி பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு யூரியா உரம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, இச்சங்கங்களில் உரம் இருப்பு இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால், விவசாயிகள் தனியாா் உரக்கடைகளை நாடும் நிலை உள்ளது. தினந்தோறும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் யூரியா உரம் வாங்க தனியாா் கடைகளுக்குச் செல்வதால், இதை பயன்படுத்தி அதிக விலைக்கு விற்பதாக புகாா் எழுந்துள்ளது. கொள்ளிடம் பகுதியிலும் இதே நிலைமை உள்ளது.