பூம்புகார் - Poombhukar

மயிலாடுதுறை: நெல் கொள்முதல் நிலைய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சித்தர்காடு நவீன அரிசி ஆலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் பொன். நக்கீரன் தலைமை வகித்தார். சிறப்பு தலைவர் முத்தையன், செயலாளர் ஆப்ரஹாம் லூதர் கிங், அண்ணா தொழிற்சங்க பொருளாளர் அசோகன், ஐஎன்டியுசி பன்னீர்செல்வம், ஏஐடியுசி ராஜ்மோகன், பாட்டாளி தொழிற்சங்கம் முருகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.  ஆர்ப்பாட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை இயக்கம் செய்யாமல் இருப்பதால் ஏற்படும் எடை இழப்புக்கு ஊழியர்களை பொறுப்பாக்குவதைக் கண்டித்தும், முறையாக பகுப்பாய்வு செய்யாமல் பணம் பிடித்தம் செய்ய உத்தரவிட்டு ஊழியர் விரோத போக்கை கடைப்பிடிக்கும் முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளரின் செயல்பாட்டைக் கண்டித்தும், உடனடியாக நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு கொண்டு செல்ல வலியுறுத்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஏற்கெனவே, கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் இயக்கம் செய்யப்படாமல் இருக்கும் நிலையில், ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக கொள்முதல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

வீடியோஸ்


நாகப்பட்டினம்